மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்தப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படம் மோகன்லாலின் திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லாலுடன் 'ராம்' என்னும் புதிய படத்தை ஜீத்து ஜோசப் இயக்குவதன் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கஉள்ளார்.
இன்று கொச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை போடப்பட்டது. இதில் நடிகர் மோகன்லால், நடிகை த்ரிஷா, இயக்குநர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இப்படத்தை ரமேஷ் பிள்ளை - சுதன் பிள்ளை ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு ஓணத்திற்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இந்தியில் 'தி பாடி' படம் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. அதேபோல் தமிழில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'தம்பி' திரைப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.