கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றே பொழுதுபோக்கு அம்சமாகவுள்ளது.
இந்த நேரத்தை பயன்படுத்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களது டி.ஆர்.பியை அதிகப்படுத்த புதிய படங்கள், பிளாக் பஸ்டர் படங்கள் என ஒளிபரப்பி வருகின்றன. இப்போது பல தொலைக்காட்சி சேனல்கள் காலை 9 மணிக்கே படங்களை ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.
இதில், ஜெயம் ரவி, இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரின் படங்கள் அதிகப்படியாக ஒளிபரப்பப்பட்டதாக மோகன் ராஜா பதிவிட்டதை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன் ராஜா கூறியிருப்பதாவது, "சில நிமிடங்களுக்கு முன் என் மகள் அப்பா இப்போது கே.டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'தனி ஒருவன்' படத்தையும் சேர்ந்து நீங்கள் இயக்கிய 8 படங்கள், சித்தப்பா நடித்த 'நிமிர்ந்து நில்', 'பூலோகம்', 'அடங்க மறு', 'வனமகன்', 'கோமாளி' படங்கள் கடந்த லாக்டவுன் 25 நாள்களில் 18 முறைக்கு மேல் ஒளிப்பரப்பிவிட்டார்கள் என்று தான் குறித்து வைத்ததைக் காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்.
இந்த லாக்டவுன் என்கிற கடின நாள்களில் எடுத்த படங்கள் மூலம் உங்கள் குடும்பங்களைத் தொடர்பு கொள்ள முடிந்ததை நினைக்கும் அதே நேரத்தில், சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கிவிட வேண்டும் என்று ஆகாயத்தில் கோட்டை கட்டிய பக்குவமற்ற வயதில் குரு என்கிற அதிகாரத் தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து ஆடியன்ஸ் தான் நம்ம கடவுள், அவங்கள திருப்தி பண்ற படங்களை மட்டுமே எடு என்கிற மந்திரத்தைத் தலையில் அன்றே ஏற்றியது நினைவுக்கு வருகிறது.
இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்களின் படங்களை பூரிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வோடு நான். படங்களில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் ஒளிபரப்பும் அத்தனை ஊடகங்களுக்கும் நன்றி" என்று ட்வீட் செய்திருந்தார்.
மோகன் ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த அற்புதமான பயணத்தில் உங்களுடன் பயணிப்பது ஆசீர்வாதம்" என்று ட்வீட் செய்துள்ளார்.