தமிழ் சினிமாவின் கிளாசிக் இயக்குநர் மகேந்திரனின் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான பெருமை மோகனுக்கு உண்டு.
நடிகை சுஹாசினியும் இவருடன் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றது. இப்படத்தில் மோகனும் சுஹாசினியும் ஜாகிங் போகும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட ’பருவமே புதிய பாடல் பாடு’ தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களில் ஒன்று.
வெள்ளி விழா நாயகன்
’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் ஒரு ஆண்டுக்கும் மேல் திரையில் ஓடி சாதனை படைத்த நிலையில், மோகன் ’வெள்ளி விழா நாயகனாக’ அறியப்பட்டார்.
உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் தமிழ் சினிமாவின் கோலோச்சிய அன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், நூறாவது நாள், இதய கோவில், உதய கீதம், மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, ரெட்டை வால் குருவி என பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக மோகன் கொண்டாடித் தீர்க்கப்பட்டார்.
நடிகைகளின் அம்மாக்களின் ஃபேவரைட் ஹீரோ
தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி காலக்கட்டம் தொடங்கி த்ரிஷா, ஹன்சிகா வரை நடிகைகளின் தாய்மார்கள் அனைத்து படப்பிடிப்பு தளங்களுக்கும் வந்து தங்கள் மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்வது வழக்கம்.
ஆனால் 80களின் காலக்கட்டத்தில் ஒரு நடிகருடன் தங்கள் மகள்கள் நடித்தால் கொஞ்சமும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம் என ஹீரோயின்களின் அம்மாக்களால் புகழப்பட்ட ரத்தின நடிகர் மோகன். இதனை நடிகை சுஹாசினி ஒரு பேட்டியில் பெருமையுடன் பகிர்ந்திருப்பார்.
மோகன் ஹிட்ஸ்
தமிழ் சினிமா வரலாற்றின் முத்து முத்தான பாடல்கள் அமைந்த நல்வாய்ப்பு பெற்றவர் மோகன். குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையில், பாடகராக மோகன் நடித்த பெரும்பான்மை படங்களில் அப்பாடல்களுக்கு திரையில் உயிர் கொடுத்து ஆடியன்ஸ்களிடம் பாடல்களைக் கடத்தியிருப்பார்.
இளையராஜா ஹிட்ஸ், எஸ்பிபி ஹிட்ஸ் எனும் பிளே லிஸ்டுகளுக்கு மத்தியில் உலவும் ’மோகன் ஹிட்ஸ்’ பிளே லிஸ்டே இதற்கு சான்று!