'அசுரன்' படம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனையும், அதில் கதையின் நாயகனாக நடிகர் தனுஷ் ஆகியோரை தெலைபேசிவாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இதனிடையே நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த ஸ்டாலின் அசுரன் திரைப்படத்தை அருகில் இருந்த திரையரங்கில், தனது சகாக்களான ஐ.பெரியசாமி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து பார்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படம் குறித்து வெகுவாகப் பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் ஆகியோரை தெலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். அப்போது அவர்,' அசுரன் படத்துல பஞ்சமி நில உரிமை மீட்பு விவகாரத்தை கையில் எடுத்து , சாதி வன்மத்துக்கு எதிராக சரியாக எடுத்திருக்கீங்க. படம் நல்லா வந்திருக்கு. பின்னீட்டீங்க' என வாழ்த்தியுள்ளார். இதனால் அசுரன் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் வாசிங்க: ’நடிப்பு அசுரன் தனுஷ்’ - இயக்குநர் பா.ரஞ்சித்