லண்டன்: ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் படப்பிடிப்பை செப்டம்பரில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் முதல் நிலை உதவி இயக்குநர் டாமி கோர்ம்லே கூறும்போது,
"இந்தப் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். கடைசியாக வெனிஸ் நகரில் படப்பிடிப்பை நடத்தினோம். நான்கு, ஐந்து நாள்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட, நாங்களும் படப்பிடிப்பை நிறுத்தினோம்.
நாங்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் சென்று நிலவரத்தை பார்க்க உள்ளோம். தற்போது வெனிஸ் நகரில் படமாக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் அந்தக் காட்சிகளை யுகே-வுக்கு சென்று ஸ்டுடியோவில் படமாக்கவுள்ளோம். எனவே, வரும் செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிடுவோம் என நம்புகிறோம் என்றார்.
மேலும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சினிமா சார்ந்த பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் பலரும் வேலைகளை இழந்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப விரும்புகின்றனர். அந்த வகையில் அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். இருப்பினும் இது சத்தியமானது என்பதால் அதற்கான வேலைகளையும் செய்து வருவதாகவும் கூறினார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போன்று மிஷ்ன் இம்பாசிபிள் சீரிஸ் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில், படத்தின் முந்தைய பாகங்களில் இடம்பெற்ற டாம் க்ரூஸின் அதிரடி ஆக்ஷன், சாகச காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து தற்போது உருவாகி வரும் மிஷன் இம்பாசிபிள் 7 படம் நவம்பர் 19, 2021ஆம் ஆண்டு திரைக்கு வருகிறது.