கரோனா தொற்று போன்று கிருமியின் தாக்குதலால் ஆபத்து நிகழலாம் என்பதை கணித்திருந்த மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், ரசிகர்களின் கிண்டல்களையும் மீறி முகமூடி அணிந்துகொண்டு வலம் வந்ததாக அவரது முன்னாள் மெயக்காப்பாளர் கூறியுள்ளார்.
பாப் உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த மைக்கேல் ஜாக்சனிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் மேட் ஃபிட்டெஸ். இவர், கரோனா தொற்று போன்று கிருமி தொற்று பரவலாம் என்பதை மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது கணித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
இயற்கை பேரழிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று அடிக்கடி மைக்கேல் ஜாக்சன் கூறுவார். எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்த அவர், கிருமி தொற்றுகளால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான சூழல் எந்நேரமும் ஏற்படலாம் என உயிருடன் இருந்தபோதே கணித்திருந்தார்.
ஒரே நாளில் நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை அவருக்கு ஏற்பட்ட நேரத்தில், கிட்டத்தட்ட விமானத்திலேயே அவர் இருந்தார். இதனால் எங்கு சென்றாலும் கேலி, கிண்டல்களை மீறி முகமூடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.