தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும், இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில்தான் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழுத் திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக, நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஆச்சார்யா படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தனர்.
தற்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைத்துவிட்டதால் நவம்பர் 9ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி படப்பிடிப்பில் கலந்துக்கொள்வதற்காக சிரஞ்சீவி கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார்.
அந்தப் பரிசோதனையில் சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தஅறிக்கையில், "ஆச்சார்யா படப்பிடிப்புக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னைக் கடந்த ஐந்து நாட்களில் சந்தித்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளவும். என் உடல் நிலை குறித்து விரைவில் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்" என அதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிரஞ்சீவி விரைவில் தொற்றிலிருந்து மீண்டுவரவும் பூரண குணமடையவேண்டியும் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.