லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் "குட்டி ஸ்டோரி", "வாத்தி கம்மிங்" உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக படத்தின் டீசர் வெளியானது.
இந்த டீசரை இதுவரை 40 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பொங்கல் வெளியீடாக ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் பரவின. இந்தத் தகவலுக்கு 'மாஸ்டர்' படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடரும் இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பீர்கள் என நம்புகிறோம். மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் எவ்வளவு தூரம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களைப் போலவே நாங்களும் அந்த மிகப்பெரிய கொண்டாட்ட தினத்திற்காக காத்திருக்கிறோம்.
கடந்த சில தினங்களாக பல வதந்திகள் உலவிவரும் நிலையில் அதற்குத் தெளிவுதர விரும்புகிறோம், பிரபலமான ஓடிடி தளத்திலிருந்து படத்தை வாங்க பேசப்பட்டாலும் நாங்கள் திரையரங்க வெளியீட்டையே விரும்புகிறோம். அதுவே தற்போது நிலவிவரும் நெருக்கடியில் துறைக்கு முக்கியத் தேவையாகும்.
தமிழ்த் திரைத் துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்களும் எங்களுடன் நின்று எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களைச் சந்திக்கிறோம், பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையால் தற்போது 'மாஸ்டர்' குறித்தான வதந்திக்கு சமூக வலைதளத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் என்ற நல்ல செய்தியே படக்குழுவினர் கூறியிருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.