'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய், 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படம் குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான 'ஒரு குட்டி கதை' பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் தனது பட இசை வெளியிட்டு விழாவில், ஒரு குட்டி கதை சொல்லி விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான ஒன்று. தற்போது ’மாஸ்டர்’ படத்தில் ஒரு குட்டி கதை என்னும் வரிகளில் பாடல் உருவாகியுள்ளதால், பாடல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது.