மார்வெல் காமிக்ஸின் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்று பிளாக் பேந்தர். 2018ஆம் ஆண்டு ரிலீஸான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது.
பிளாக் பேந்தர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பிளாக் பேந்தர் 2 தயாராகிவருகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம், பிளாக் பேந்தராக நடித்திருந்த சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
இதனால் பிளாக் பேந்தர் திரைப்படத்தில் சாட்விக் போஸ்மேன் நடிக்க வேண்டிய காட்சிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இத்தகவலை முற்றிலுமாக மறுத்த மார்வெல் காமிக்ஸ், "கிங் டி சல்லா(பிளாக் பேந்தர் திரைப்படத்தில் சாட்விக் போஸ்மேன் ஏற்றிருந்த கதாப்பாத்திரத்தின் பெயர்) ஒருவர்தான். அவர் தற்போது நம்முடன் இல்லை. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று தெரிவித்திருந்தது.
சாட்விக் போஸ்மேனின் மறைவைத் தொடர்ந்து பிளாக் பேந்தர் திரைப்படத்தின் கதையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் அட்லாண்டாவில் தொடங்கி ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் ஹாலிவுட் ரிப்போர்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் முன்கூட்டியே வெளியாகும் 'வொண்டர் வுமன் 1984'