தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா’ - மக்கள் இயக்குநர் மணிவண்ணனை நினைவுகூறுவோம்! - சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா

”உலகத்தில் இருக்கும் அனைவராலும் தமிழன் ஒடுக்கப்படுறான், அடக்கப்படுறான், உலகம் முழுவதும் தமிழன் சிதறிக் கிடக்குறான், அவனை ஒருங்கிணைக்கும் பாடலாக, எழுச்சி பெறச் செய்யும் பாடலாக இதை நினைக்கிறேன். அதனால் இந்தப் பாடலை கேட்கிறேன்” என சொல்லியிருப்பார் மணிவண்ணன்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

By

Published : Jul 31, 2021, 7:12 AM IST

தமிழ் சினிமா இயக்குனர்களில் மறக்க முடியாத பெயர் மணிவண்ணன். மார்க்சியவாதியும், தமிழ் தேசிய உணர்வாளருமான மணிவண்ணன், திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்துச் சென்றவர். இன்று அவரது 68ஆவது பிறந்தநாள்.

எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போல மக்களை சிரிக்க வைக்கப்பதோடு சிந்திக்கவும் வைத்த கலைஞர்கள் வெகு சிலரே, அவர்களில் மணிவண்ணன் முக்கியமானவர்.

பாரதிராஜாவின் கதாசிரியர், உதவி இயக்குநர் என அவரது சினிமா பயணம் தொடங்கியது. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை படங்களில் கதாசிரியர் மணிவண்ணன்தான்.

சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா - மணிவண்ணன்

சிந்திக்கத் தூண்டும் அவரது நகைச்சுவைக் காட்சிகள் எக்கச்சக்கம். காதல் கோட்டை படத்தில் டெலிபோனின் பயன் குறித்து பேசி, ’சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா’ என அறிவியலின் பக்கம் நின்ற மணிவண்ணன், உலகமயமாதல் குறித்தும் அப்போதே தெளிவாகப் பேசியிருந்தார். ஒரு படத்தில் ”ரயிலை எப்படியும் தனியாருக்குதான் விற்பாய்ங்க, அப்ப ஒரு ரயில விலைக்கு வாங்கி என் பேர வச்சுவிட்ருவேன்” என்று பகடி செய்திருப்பார்.

நிழல்கள் திரைப்படம்

உலக அளவில் சிறந்த அரசியல் பகடி திரைப்படங்களின் பட்டியலை நீங்கள் தயார் செய்தால், அதில் ‘அமைதிப் படை’ என்ற பெயர் தவிர்க்க முடியாதது. வாக்கரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி மக்களை சுரண்டிப் பிழைக்கின்றன என்பதை நாகராஜ சோழன் என்ற எம்.எல்.ஏ வாயிலாக எடுத்துச் சொல்லியிருப்பார்.

அமைதிப் படை படக்காட்சி

சினிமா என்பது தெய்வீகக் கலை அது இது என கதையளக்காமல், ”சினிமா நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில், அதில் சமூகத்தை சீரழிக்கும் சில விஷயங்கள் இருப்பதைக் கண்டு வெட்கப்படுகிறேன்” என மணிவண்ணன் கூறியிருப்பார்.

காதல் கோட்டை படக்காட்சி

'தோல்வி நிலை என நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா’ - ஊமை விழிகள் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் மணிவண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். ஒரு நிகழ்ச்சியில் தனக்காக இந்தப் பாடலை போடச் சொன்ன மணிவண்ணன், ”தமிழ் சினிமாவில் எத்தனையோ மோசமான பாடல்கள் வருகின்றன, சில நேரம் மட்டும்தான் மக்களை எழுச்சிபெறச் செய்யும் இதுபோன்ற பாடல் வரும்.

மக்கள் இயக்குநர் மணிவண்ணன்

உலகத்தில் இருக்கும் அனைவராலும் தமிழன் ஒடுக்கப்படுறான், அடக்கப்படுறான், உலகம் முழுவதும் தமிழன் சிதறிக்கிடக்குறான், அவனை ஒருங்கிணைக்கும் பாடலாக, எழுச்சி பெறச் செய்யும் பாடலாக இதை நினைக்கிறேன். அதனால் இந்தப் பாடலை கேட்கிறேன் எனச் சொல்லியிருப்பார்.

மக்கள் நலன் சார்ந்து சிந்தித்த இந்த மாபெரும் கலைஞனின் பிறந்த நாள் இன்று. அவரை நினைவுகூருவோம்.

ABOUT THE AUTHOR

...view details