பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று தொடங்கியுள்ளது.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவது என்பது பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா படைப்பாளிகளின் கனவாகத் திகழ்ந்து வந்துள்ளது. இதையடுத்து தற்போது பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்புடன் அதை திரை வடிவமாக்க களமிறங்கியுள்ளார், தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர் மணிரத்னம்.
இந்தப் படம் குறித்து நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் இன்று தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் வரை அங்கு நடைபெறுகிறது. அப்போது படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம்.
இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ஷன் இயக்குநர் ஷாம் கெளசாலுடன் இணைந்து லொகேஷன் வேட்டையில் ஈடுபட்டிருந்தார் இயக்குநர் மணிரத்னம். அத்துடன் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நிலையில், தற்போது அவர் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.
ரஜினியின் 168வது படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருப்பதால், கால்ஷீட் பிரச்னை காரணமாக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அவர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளனராம்.
மேலும், படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன் அருள்மொழிவர்மன் கதையை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கும் பொன்னியன் செல்வன் நாவலை, படமாக இயக்குவது இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த நிலையில், தற்போது அதன் ஷுட்டிங் தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக 'பொன்னியின் செல்வன்' கதையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குநருமான செளந்தர்யா வெப் சீரிஸாக இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் அதுதொடர்பாக பேசப்படவில்லை.