லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் செய்துவரும் சமூக சேவைகளைப் பாராட்டும் விதமாக மலேசியப் பல்கலைக்கழகம் அவருக்கு 'கலாநிதி' கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது.
அதற்கான சிறப்பு செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
லைகா புரொடக்ஷன்ஸ் செய்தியாளர் சந்திப்பு இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம் , முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சுபாஷ்கரனுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர்.
இதில் பேசிய இயக்குநர் மணிரத்னம், 'நான் முதல் முறை சுபாஷ்கரனை சந்தித்தபோது இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி சாத்தியாமானது என்று கேட்டு வியந்தேன். சுபாஷ்கரனின் வாழ்க்கையை அவர் விருப்பப்பட்டால் பயோகிராஃபியாக கூட எடுக்கலாம். வாழ்வில் வெற்றி பெறுவது பெரிதல்ல, வென்ற பிறகு எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது. அவர் அருகில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் முருகதாஸ், ‘கத்தி படத்தின் மூலம் சுபாஷ்கரன் அறிமுகமானார். அப்போது லைகா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தினால்தான் சினிமாவில் முதலீடு செய்து வருகிறார். அண்மையில் தர்பார் படத்திற்காக 4 நாட்கள் நான் லண்டன் சென்றிருந்தேன். உண்மையில் சுபாஷ்கரனை நினைத்து தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
நம்மை 200 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பிரிட்டிஷ் நாட்டில் சென்று அவர்களை சுபாஷ் ஆளுமை செய்து வருகிறார். அதைப்பார்த்த போது எனக்கு காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளத் தோன்றியது. பிரிட்டிஷ்காரர்கள் லைகா நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். உழைப்பை மட்டுமே முதன்மையாக்கி வாழ்க்கையை சுபாஷ்கரன் வென்றுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் - சுபாஷ்கரன் மலேசியப் பல்கலைக்கழகத்திடமிருந்து இந்த விருதைப் பெறுவதற்கு சுபாஷ்கரன் 100 சதவிகிதம் தகுதியானவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆசைப்படுகிறேன். மணிரத்னம் ஒரு பாகம் எடுத்தால் நான் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய லைகா அதிபர் சுபாஷ்கரன் 'நானும் தமிழன்தான், உங்களில் ஒருவன்' என கூறினார்.
இதையும் படிங்க:ரஜினி பிறந்தநாளை 70 நாட்கள் கொண்டாடும் ரசிகர் படை