கொச்சி: நவம்பரில் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட மாமாங்கம் திரைப்படம் டிசம்பருக்கு தள்ளிப்போயிருக்கும் நிலையில், சிறப்பான நாளில் திரைக்குவரவுள்ளது.
கடந்த இரு நாள்களுக்கு முன் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதையடுத்து படம் வரும் 21ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது படத்தின் வெளியீடு டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது.
டிசம்பர் 12ஆம் தேதி மாமாங்கம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடித்துள்ள மாமாங்கம் வெளியாகவுள்ளது.
கேரளாவில் பிரபலமான களரி கலை, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மாமாங்க திருவிழா ஆகியவற்றை எடுத்துரைக்கும் இந்த வரலாற்று திரைப்படத்தில் மம்முட்டி மாறுபட்ட கேரக்டரில் தோன்றவுள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.