பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து உருவாகி வரும் வராலாற்றுத் திரைப்படம் 'மாமாங்கம்'. இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். இந்தப் படத்தை காவ்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கேரளாவிலுள்ள மலபார் பகுதியில் கொண்டாடப்படும் 'மாமாங்கம்' என்ற திருவிழாவை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 18ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் அமைந்துள்ள படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பில் மம்முட்டியே சொந்தமாக குரல் கொடுத்துள்ளார்.
இப்படம் குறித்து பத்மகுமார் கூறுகையில், மம்மூட்டியின் பிரபலம், ரசிகர்கள் வட்டம் மலையாளத்தை கடந்து இந்தியா முழுவதும் பரவி உள்ளது. தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களை தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத்தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.
படத்திற்கு தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது. அதிலும் பழங்காலத் தமிழ் மொழியை உச்சரிப்பை தன் குரலில் தமிழ் ரசிகர்களுக்காக பலமுறை ரிகர்சல் செய்து டப்பிங் செய்துள்ளார்.