தற்சமயம் இணையவாசிகளின் கனவு கன்னியாக விளங்கிவருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்தி கசிய ஆரம்பித்ததிலிருந்தே இவருக்கு ரசிகப் பட்டாளம் அதிகரித்தது.
அதிலும் அவ்வப்போது கவர்ச்சியான தனது ஃபோட்டோசூட் புகைப்படங்களை மாளவிகா அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களைக் கிறங்கடித்துவந்தார்.
ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து வெளியாகாததால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால் மாஸ்டர் திரைப்படப் பாடல்கள் அவர்களது வருத்தத்திற்கு ஆறுதலாக இருந்தது.
அவ்வப்போது மாஸ்டர் டீமும் தங்களது வீடியோகால் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிர்வித்தனர். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படக் குழு இந்த ஊரடங்கில் வீட்டில் இருந்தால் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்ற கற்பனையில் வரையப்பட்ட ஓவியம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து அந்த ஓவியத்தில் மாளவிகா மோகனன் சமைத்துக்கொண்டிருப்பது போன்று வரையப்பட்டிருந்ததால் கவலையடைந்த அவர், 'ஒரு கற்பனை ஓவியத்தில்கூட பெண்கள் சமைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமா, எப்போது இதுபோன்ற பாலின வேற்றுமைகள் மறையும்?' என ஆதங்கப்பட்டு ட்வீட் செய்திருந்தார்.
முன்பு வெளியான மாளவிகாவின் பதிவு அந்தப் பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதைத்தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். இதையடுத்து அவரை இணையவாசிகள் தீவிரமாகக் கலாய்த்துவந்தனர். அந்தப் பதிவுக்கு பலர் தங்களது ஆதரவு குரலையும் ஒலித்துவந்தனர்.
இந்நிலையில் மற்றொரு ரசிகர் ஒருவர் அந்த ஓவியத்தை மாற்றியமைத்து மாளவிகா அதில் புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதைப்போல் பதிவிட்டார். இதைப் பார்த்த மாளவிகா மகிழ்ந்துபோய் அதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, 'இதுதான் எனக்குப் பிடித்த வெர்ஷன், எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
தற்போது வந்துள்ள இந்த ஓவியம் ரசிகர்களையும் புண்படுத்தாமல், மாஸ்டர் நாயகியையும் புண்படுத்தாமல் சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.