மறைந்த நடிகை, இயக்குநர் விஜய நிர்மலாவின் சிலையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அவரது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
விஜய நிர்மலாவின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகரும், விஜய நிர்மலாவின் கணவருமான கிருஷ்ணா, மகேஷ் பாபு கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் விஜய நிர்மலா. மூன்று தசாப்தங்களாக திரைத்துறையில் பங்களிப்பை அளித்து வந்து இவர் 44 படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட விஜய நிர்மலா, 1950ஆம் ஆண்டு தமிழில் வெளியான மச்ச ரெக்கை படத்தில் அறிமுகமானார். இதையடுத்து தனது 11ஆவது வயதில் பாண்டுரங்க மஹாத்யம் என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
மலையாள நடிகர் பிரேம் நஸிர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான பார்கவி நிலையம் படம் மூலம் ஹீரோயினாக மாறினார் விஜய நிர்மலா. தொடர்ந்து பிரேம் நஸிருடன் இணைந்து உத்யோகஸ்தா என்ற படத்தில் நடித்த இவர், ரங்குல ரதம் என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோயின் ஆனார்.
1967ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கு முதல் முறையாக சாக்ஷி என்ற படத்தில் ஜோடியாக நடித்த இவர், அதன் பிறகு அவருடன் இணைந்து 47 படங்கள் நடித்தார். இதையடுத்து கிருஷ்ணா - விஜய நிர்மலா திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கு இரண்டாவது திருமணமாக அமைந்தது.
பின்னர் 1971ஆம் ஆண்டு மீனா என்று தெலுங்கு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பிரபல எழுத்தாளர் சுலோஷனா ராணி எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் அமைந்திருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாள மொழியிலும் திரைப்படம் ஒன்றை இயக்கிய இவர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான் நடிகர்களை இயக்கிய பெண் இயக்குநராக திகழ்கிறார்.
தனது கணவர் கிருஷ்ணா நடிக்க இந்தியில் சக்கைபோடு போட்ட அமர் அகபர் அந்தோணி படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கினார். அதிக திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற கின்னஸ் விருதையும் தன் வசம் வைத்துள்ளார் விஜய நிர்மலா.
Mahesh Babu unveils statue of actress Vijaya Nirmala