ஹைதராபாத்: டோலிவுட்டின் 'ட்விட்டர் ஸ்டார்' என்ற விருது ’ஸீ திரை விருதுகள்’ நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. ’ஸீ திரை விருதுகள் தெலுங்கு 2020’ நிகழ்ச்சியில் டோலிவுட் சினிமா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாக்களில் ஜொலித்த பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு #ThisHappened என்ற ஹேஷ்டாக்கில் பதிவான தகவல்களின் அடிப்படையில் மகேஷ் பாபுவின் பெயர் தெலுங்கு திரையுலகினராலும், ரசிகர்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மகரிஷி, சரிலேரு நீகேவரு ஆகிய படங்கள் ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட டாப் 5 விஷயங்களில் இடம்பிடித்துள்ளது. இந்திய அளிவில் திரைத்துறையைச் சேர்ந்த டாப் 10 ஆண் பிரபலங்களில் தெலுங்கு திரையுலகைப் பொறுத்தவரை மகேஷ் பாபு பெயர் மட்டுமே உள்ளது.
இதன் அடிப்படையில் மகேஷ் பாபுவுக்கு 'ட்விட்டர் ஸ்டார்' என்ற விருது ஸீ திரை விருதுகள் தெலுங்கு 2020 நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இந்த விருது குறித்து மகேஷ் பாபு கூறுகையில், ”டோலிவுட்டின் ட்விட்டர் ஸ்டாராக கெளரவம் அளித்திருப்பது பெரிய விஷயம். இந்த விருதை வழங்கிய ஸீ தெலுங்கு நிறுவனத்துக்கு நன்றிகள்.
ட்விட்டரில் எனது ரசிகர்களிடமிருந்து நிலையான அன்பு, பாராட்டுகளை பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவர்களிடம் ட்விட்டர் மூலம் உரையாடுவேன்” என்றார்.