இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
கரோனா பரவல் காரணமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் வில்லனாக மாதவன் நடிக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், " இயக்குநர் லிங்குசாமி மிக இனிமையான மனிதர். துரதிர்ஷ்டவசமாக அவர் இயக்கும் தெலுங்கு படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வந்திருக்கும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ட்வீட் செய்துள்ளார். மாதவன் லிங்குசாமியுடன் 'ரன்', 'வேட்டை' என இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.