வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் டைம் லூப்பை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
ஆனால் அதற்குள் மாநாடு படம், Cho Sun Ho இயக்கத்தில் வெளியான A Day படம் போலவே இருப்பதாகப் புதிய சர்ச்சை எழுந்தது. 'மாநாடு' படம் தீபாவளிக்கு வெளியாவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்துடன், ரஜினியின் அண்ணாத்த, விஷால்-ஆர்யா நடித்த எனிமி ஆகிய படங்கள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி ரேஸிலிருந்து மாநாடு திரைப்படம், விலகுகிறது.
போதிய திரையரங்குகள் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படத்திற்குத் திரையரங்குகள் அதிகமாகத் தேவைப்படுவதால் படக்குழு ரிஸீஸ் தேதியைத் தள்ளிவைக்க முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரையுலகிற்கும் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம். நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில ஆண்டுகள் உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் மாநாடு.
முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்து தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.
போட்டி என்ற ரீதியில் பல வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பது வியாபாரம். நமது மாநாடு படம் நன்றாக வந்துள்ளது அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிட்டோம். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.
அதைப்போல் விநியோகஸ்தர்களும், திரையரங்கு வெளியீட்டிற்காகப் பணம் போட்டவர்கள் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும் நட்டமடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? அதனால் மாநாடு தீபாவளிக்கு வெளியில் வராமல் சற்று தள்ளி வெளியாகிறது.
நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றிபெற வாழ்த்துகள் பொறுமையாக எங்கள் முடிவை ஏற்றுப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:என்னது மாநாடு படம் கொரியன் படத்தின் காப்பியா?