தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சந்தோஷ் நாராயணன் இசையில் என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் வெளியீடு! - maaja album released by santhosh narayanan

ஏ. ஆர். ரஹ்மான் புதிதாக உருவாக்கியுள்ள தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டுசேர்க்கும் புதிய தளமான மாஜா தளத்தின் முதல் பாடலாக 'என்ஜாய் எஞ்சாமி' (Enjoy Enjaami) பாடல் இன்று (மார்ச் 6) பாடகி தீ குரலில், அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்.

என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் வெளியீடு
என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் வெளியீடு

By

Published : Mar 6, 2021, 6:52 PM IST

Updated : Mar 6, 2021, 7:08 PM IST

இயக்குநர் மணிகண்டன்

இயக்குநர் மணிகண்டன் பேசுகையில், "முதலில் இப்பாடலுக்கு முழுதாய் நான் தயாராகவில்லை. பாடலை கேட்கவுமில்லை. ஆனால் அறிவின் வரிகளைக் கண்டு பிரமித்தேன். நம் தமிழ் கலாசாரத்தின் வலிமையை எடுத்துரைப்பதாக வரிகள் அமைந்திருந்தன.

இந்தப் பாடல் சமத்துவத்தைப் பேசும் வகையில் அமைந்திருந்தது. சமத்துவம் என்னும்போது உலகில் அனைத்துமே சமம்தான். புல் பூண்டும் வண்ணத்துப்பூச்சியும் ஒன்றுதான். தீ பெரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். அவரது குரலில் பாடலின் அனைத்து உணர்வுகளையும் கொண்டுவந்துள்ளார். சந்தோஷ் நாராயணனுடன் பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. ஒவ்வொரு வரியையும் இசையாக மாற்றும் அவரது மேதமை பிரமிப்பானது" என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி

"நான் பாடலை ஏற்கனவே கேட்டுவிட்டேன். ஆனால் பாடலை விஷூவலாகப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தேன். ஒவ்வொரு பாடலும் ஒரு கதையைச் சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். இப்பாடல் அப்பணியினை மிகச்சிறப்பாகச் செய்துள்ளது" எனக் கூரினார் நலன் குமாரசாமி.

இயக்குநர் மாரி செல்வராஜ்

"தீ அற்புதமான திறமைகொண்ட கலைஞர். வரிகளைப் பாடலாகத் தனது குரலில் கொண்டுவருவதில் தனித்துவமான திறமைகொண்டவர். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்பு அனைவரும் பிரமிக்கும் வண்ணம் உள்ளது. அறிவு, தீ இருவரும் இப்பாடலில் வியத்தகுப் பணியைச் செய்துள்ளார்கள்.

அனைத்துத் தரப்பிலிருந்தும் விருதுகள் பாராட்டுகள் அவர்களை வந்தடையும். சந்தோஷ் நாராயணன் இவர்கள் இருவரையும் இப்பாடலுக்கு அழைத்துவந்திருப்பது மிகச்சிறப்பானது. அவர்கள் இருவரையும் போலவே இவரும் பெரும் திறமைசாலி. மிகப்பெரும் உயரத்தில் இருந்தாலும் எளிமையாக இருக்கக்கூடியவர். ஏதாவது குக்கிராமத்திலிருந்து திறமைசாலிகளை நான் அறிமுகப்படுத்தினாலும் அவர்களின் திறமையை மதித்து உடனடியாகப் பயன்படுத்துவேன்" என மாரி செல்வராஜ் பேசினார்.

இயக்குநர் சுதா கொங்கரா

"'இறுதிச்சுற்று' படத்திற்கு நாங்கள் ஒரு முக்கியமான பாடலைப் பதிவு செய்யும்போது இளம்பெண் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குரலை தேடிக்கொண்டிருந்தோம். சந்தோஷ் நாராயணன் அப்போதுதான் தீ அவர்களின் திறமையை அறிமுகப்படுத்தினார். அவரும் அற்புதமாகப் பாடித்தந்தார். இப்போதுகூட 'சூரரைப் போற்று' படத்தில் 'காட்டுப் பயலே' பாடலில் பிரமாதப்படுத்தியிருந்தார். சந்தோஷ் நாராயணன், அறிவு, தீ கூட்டணி யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி" என்றார் சுதா கொங்கரா.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு

"இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடனான பயணம் 'கபாலி' திரைப்படத்திலிருந்து தொடங்கியது. பின் 'காலா', 'கர்ணன்' படத்திலும் தொடர்கிறது. இன்னும் எங்கள் பயணம் தொடரும். இப்பாடல் அற்புதமாக வந்துள்ளது. உறுதியாகச் சொல்கிறேன் இப்பாடல் உலகளவில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவிக்கும்" என்று பேசினார் எஸ். தாணு.

என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் வெளியீடு

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

"நானும் சந்தோஷ் நாராயணன் அவர்களும் இப்பாடலின் மையத்தை குறித்து பல காலமாக விவாதித்துள்ளோம். ஆனால் அவரது குறிக்கோள் தீ அவர்களை அறிமுகப்படுத்துவது அல்ல, சுயாதீன கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதுதான்" என்றார்.

இயக்குநர் ரஞ்சித்

"இப்பாடல் சந்தோஷ் நாராயணன், அறிவு, தீ அவர்களின் மிகச்சிறப்பான பணியாகும். இந்த முயற்சி தரமான தனித்துவமிக்க பாடலை உருவாக்குவது மட்டுமல்ல, அடையாளமின்றி இருக்கும் திறமைமிகு சுயாதீன கலைஞர்களை வெளிச்சம் போட்டு காட்டும் முயற்சியாகும்.

டிஜிட்டல் தளம் இசைக்கும், ரசிகர்களுக்குமான தூரத்தையும் தடைகளையும் உடைத்துள்ளது. இன்னும் நிறைய தனித்துவமான இசைக்கலைஞர்கள் வரும் காலத்தில் வளர்ந்துகொண்டே இருப்பார்கள்" என்றார்.

இசையமைப்பாளர் தேவா

"இது மிகவும் அழகான நிகழ்வு. சந்தோஷ் நாராயாணன் புது கலைஞர்களை ஊக்குவிப்பதை, நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தீ நம் பகுதியைச் சேர்ந்த ஒருவரைப் போலத் தெரியவில்லை, ஆனால் அவரது தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது. பாடலாசிரியர் அறிவு மிக அற்புதமான வேலையை செய்துள்ளார்" என்றார்.

பாடலாசிரியர் அறிவு

"ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்க்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால் இன்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது, எனது பாடல் மிகப்பெரும் வெளியீட்டு நிகழ்வில் வெளியாகிறது.

படத்திற்கு பாடல் எழுதுவது, சுயாதீனமான பாடல்கள் எழுதுவதிலிருந்து மாறுபடுகிறது. படத்திற்கு ஒரு சூழலுக்கான பாடல்தான் எழுத வேண்டியுள்ளது, தனியாக எழுதும்போது ஒரு கருவை மையப்படுத்தி எழுதலாம்.

இப்படியான தளத்தை உருவாக்கியதற்கு மாஜாவிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கும் நன்றி சொல்லிகொள்கிறேன். சந்தோஷ் நாராயணன் ஒரு அரசியல் இசையமைப்பாளர், அவர் ஒரு பாடலை சாதாரணமாக இசையமைக்கமாட்டார். மிகவும் ஆழமாகச் சென்று, அதன் அடிநாதத்தை கண்டறிந்து இசையமைப்பார்" என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

"அறிவு போன்ற நன்கு அறிந்த கலைஞருக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வருகிறது. கற்பனை செய்து பாருங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுயாதீன கலைஞர்கள் உள்ளனர், அவர்கள் அங்கீகாரங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

இப்போது நாங்கள் பல கிராமங்களையும் நகரங்களையும் பார்வையிடத் தொடங்கியுள்ளோம். அவர்களின் ஆத்மார்த்தமான படைப்புகளை ரசிப்பதைவிட, அந்தக் கலைஞர்களின் திறமைகளை முன்பே காட்சிப்படுத்தாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்க விரும்பினேன். தீ ஒரு திறமையான கலைஞர். புதிய இசையை ஆராய்வதற்கான எனது லட்சிய உந்துதலின் பின்னால் உள்ள உத்வேகம் ரஞ்சித்தான்" என்றார்.

இதையும் படிங்க:ராஷ்மிகாவின் 'மிஷன் மஜ்னு' படப்பிடிப்பு தொடக்கம்!

Last Updated : Mar 6, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details