நோவா பௌம்பாக்கி இயக்கத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், ஆடம் ட்ரைவர் நடித்து வெளிவந்த திரைப்படம் மேரேஜ் ஸ்டோரி. இத்திரைப்படத்தில் நோரா ஃபேன்ஷா எனும் வழக்கறிஞராக நடித்த லாரா டெர்ன், கோல்டன் க்ளோப், பாஃப்டா விருதுகளைத் தொடர்ந்து சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் இந்த கதாபாத்திரத்திற்காக வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இன்று தனது 53ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ள நடிகை லாரா இதைவிட வேறு சிறந்த பிறந்தநாள் பரிசு தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விழா மேடையில் ஆஸ்கர் விருதை தன் பெற்றோருக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த நடிகை லாரா டெர்ன், மேரேஜ் ஸ்டோரி திரைப்படம், ஒரு திருமணம் வீழ்வது குறித்து இரக்கத்துடன், கூர்மையாக அலசினாலும், ஒரு குடும்பத்தை சிதையாமல் ஒன்றிணைப்பது குறித்தும் பேசியுள்ளது என்று தெரிவித்தார்.
இத்திரைப்படத்தில் நிக்கோல் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சன் சார்பில் வாதாடும் வழக்கறிஞராக லாரா டெர்ன் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஆஸ்கர் மேடையில் அநீதிக்கெதிராகக் குரல் எழுப்பிய ‘ஜோக்கர்’ நாயகன்!