தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் அனைவராலும் முல்லையாக கொண்டாடப்பட்ட சித்ரா, எதிர்பாராதவிதமாக கடந்த டிசம்பர் மாதம் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. சித்ராவின் இந்தத் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக கால்ஸ் என்ற திரைப்படத்தில் சித்ரா நடித்துவந்தார். சபரீஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம் அழைப்புதவி மையப் (கால்சென்டர்) பணியில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் சித்ராவின் நிஜ வாழ்க்கையில் பொருந்துவது போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.