நடிகர் விஜய்சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அப்போது கோயில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்கார முறைகளை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதையடுத்து, விஜய் சேதுபதி தொடர்ந்து இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாக, இந்து மக்கள் முன்னணி அமைப்பினர் அவர் மீது சமீபத்தில் புகார் அளித்தனர்.
விஜய்சேதுபதியின் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக, சில விஷக்கிருமிகள் இதுபோன்ற வீடியோக்களை சமூகவலைதளத்தில் பரப்பி வருவதாகவும், விஜய்சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கோயில் சடங்குகளை புனிதமானதாகக் கருதுபவர்கள் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள். எந்த மதத்துக்குரிய மதப் பழக்க வழக்கங்களையும் கேலி செய்வதற்கு யாரும் தைரியம் இருக்காது.
நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாள் எந்த அர்த்தத்தில் எப்போது அவர் அப்படி பேசினார் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.