தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியமைக்காக தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் (STEPS) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் பேசுகையில், "கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழிலாளர்கள் பலர் அவதிப்பட்டனர். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். படப்பிடிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களுடன் நாங்கள் இன்று ஜூம் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினோம். முன்னதாக, நானும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளருமான குஷ்பூவும், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க கோரிக்கை வைத்தோம். அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்வேன் என்று உறுதியளித்தார். படப்பிடிப்பு தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை அவர் துரிதமாக கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.