டிஜிட்டல் தளத்தில் முக்கிய ஓடிடி தளமான ஜீ5 2020ஆம் ஆண்டு 'லாக்கப்', 'க.பெ.ரணசிங்கம்', 'முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட படங்களை, தங்களது தளத்தில் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தனர். இந்த வரிசையில் ஜீ5 ஓடிடி தளத்தில், 'மதில்' என்னும் படம் நேரடியாக வெளியாகிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மதில். இந்த படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை எஸ்.எஸ் குரூப்பின் உரிமையாளர் சிங்காசங்கரன் தயாரித்துள்ளார்.
'மதில்' படம் குறித்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூறியதாவது, "இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான் குடும்பப்படங்கள் அல்லது நகைச்சுவைப் படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக சமூகம் குறித்தான படம் இயக்கியுள்ளேன். 'மதில்' திரைப்படம் தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கியப்பிரச்சினைப் பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல், இருப்பவர்களின் அதிகாரத்தைக் கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் 'மதில்' படத்தில் விளக்கப்பட்டுள்ளது" என்றார்.