நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணத்தால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருந்தது.
ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் போல OTTயில் வெளியாகும் எனவும், இதன் உரிமை அமேசான் ப்ரைமுக்கு 26 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
தற்போது இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், எங்களது 'நிசப்தம்' திரைப்படம் குறித்து பலவிதமான வதந்திகள் பரவிவருகின்றன. நாங்கள் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அது என்னவென்றால், திரையரங்கில் படத்தை வெளியிடுவதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். இதே சூழ்நிலை எங்களுக்கு சாதகமாக இல்லாமல், நீண்ட காலம் நிலைத்தால் நாங்கள் படத்தை OTTயில் வெளியிடுவோம். சிறந்ததை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் இருப்போம்' என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க... ஜோதிகா...கீர்த்தி சுரேஷை பின் தொடர்ந்த 'நிசப்தம்' அனுஷ்கா?