கோலிவுட்டில் ஒவ்வொரு மாதமும், எட்டு முதல் பத்து படங்கள் வரை வெளியாகின்றன. அந்த வகையில் அடுத்த மாதம் வழக்கத்திற்கு மாறாக 13 படங்கள் வெளியாகவுள்ளது. இந்த மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ரஜினிகாந்தின் தர்பார், தனுஷின் பட்டாஸ் என்று டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியானதால், மற்ற ஹீரோக்களின் படங்களில் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள 13 படங்களின் பட்டியல் கீழே வருமாறு...
சீறு:
கீ, கொரில்லா போன்ற படத்தைத் தொடர்ந்து, ஜீவா நடித்துள்ள படம் சீறு. றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ஜீவா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சீறு படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வானம் கொட்டட்டும்:
நடிகர் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும். இயக்குநர் மணிரத்னம் திரைக்கதை எழுதி, புதுமுக இயக்குநர் தனா இப்படத்தை இயக்கியுள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகிறது.
அதோ அந்த பறவை போல:
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘அதோ அந்த பறவை போல’. தனியாக காட்டில் மாட்டிக்கொள்ளும் அமலா பால் ஒரு குழுவால் காப்பாற்றப்படுகிறார். ஆனால் அந்த உதவிக்கு பின் ஏதோ ஒரு சதி இருக்க, அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் கதை. இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது.
ஓ மை கடவுளே:
அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் காதலர் தின ஸ்பெஷாலாக ரிலீஸாகிறது. முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான 'Friendship Anthem' பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மாபியா:
அருண் விஜய் நடிப்பில் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாபியா. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். திருட்டுப்பயலே 2 படத்தையடுத்து பிரசன்னா இதில் வில்லனாக நடித்துள்ளார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான இப்படத்தின் டீஸர் பார்க்கும் போது மாபியா படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படம் அடுத்த மாதம் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பொன் மாணிக்கவேல்:
தமிழ்நாட்டில் நடக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேல் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல். பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் 21ஆம் தேதி ரிலீஸாகிறது.
ராக்கெட்ரி:
ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ள படம் ராக்கெட்ரி. மாதவன் நடித்து, இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில், வரும் 21ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆயிரம் பொற்காசுகள், சக்ரா, வால்டர், காட்பாதர், சின்ட்ரெல்லா, ஜாஸ்மின், காக்கி, எவனும் புத்தனில்லை, பொம்மை, டே நைட், கடைசி விவசாயி, அலேகா உள்ளிட்ட படங்கள் அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேல் குறிப்பிட்ட படங்களில் எத்தனை திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று, வெற்றியடைகிறது என்று பார்ப்போம்.