நடிகர் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் ஆகியோருடன் இணைந்து வாக்குப்பதிவு செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். இதனை செஃல்பி எடுத்து தனது சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். வாக்களித்த பின்னர் தனது மகள்களுடன் தான் போட்டியிடும் தொகுதியான கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற கமல்ஹாசன், தனது தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார் . அவருடன் ஸ்ருதிஹாசனும் உடன் இருந்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக தளபதி விஜய் நீலாங்கரையிலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்களில் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடியில் ரசிகர்கள் அவரைச் சுற்றி குழுமியிருந்த நிலையில், பாதுகாப்பாக சென்று வாக்குப்பதிவு செய்த பின் பைக்கில் திரும்பினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விஜய் சைக்களில் வந்தார் எனத் தகவல்கள் பரவிய நிலையில், குறுகலான சாலையில் கார் செல்ல முடியாத காரணத்தால்தான் சைக்களில் வந்ததாக அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தல அஜித், காலை 6.30 மணிக்கே மனைவி ஷாலியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்தார். கரோனா காலம் என்பதால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு காலையிலேயே அவர் வந்தபோதிலும், அவரைக் காண ரசிகர்கள் அங்கு கூடியதுடன் செஃல்பி எடுக்கவும் முற்பட்டனர். அப்போது மாஸ்க் அணியாமல் செஃல்பி எடுக்க முயற்சித்த ரசிகரின் போனை பிடுங்கி ஷாக் கொடுத்தார் அஜித். அத்துடன் தன்னை சுற்றி வந்த ரசிகர்களையும் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக வாக்களிக்குமாறு கூறிய அவர், தனது கையில் கிளவுஸ் அணிந்துகொண்டு வரிசையில் நின்று பாதுகாப்புடன் வாக்களித்தார். வாக்களிக்கும் முன் செஃல்பி ரசிகரிடமிருந்து பிடுங்கிய செல்போனை எச்சரித்த பின் அவரிடம் ஒப்படைத்தார்.