சென்னை: ஜெ. அன்பழகன் மறைவுக்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று காலமானார்.
இதையடுத்து அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், கோலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைப் பதிவு செய்துவருகின்றனர்.
இயக்குநர்கள் மனோபாலா, சேரன் தங்களது ட்விட்டரில் ஜெ. அன்பழகனின் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில், "ஜெ. அன்பழகனின் பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு அவரது உடல் நலம்பெற்று திரும்ப வேண்டும் என்று பதிவிடலாம் என்று நினைத்தபோது, அவரது மரண செய்தி வருகிறது.
சிறுநீரக பிரச்னையாலும், கரோனா தொற்றாலும் அவதிப்பட்டுவந்தார்.
மிகவும் கலகலப்பாக அன்பாகப் பழகுவார். அன்னாரைப் பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெ. அன்பழகன் புகைப்படத்தை தனது ட்விட்டரின் முகப்பில் வைத்துள்ள நடிகை குஷ்பூ, வலிமைமிக்க, நேர்மையுடைய, புரட்சிகர மனிதனான உங்களை இழந்துதவிக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு ட்வீட்டில், "திமுகவில் இருந்த ஐந்து ஆண்டுகளில் நான் கண்ட ரத்தினம் ஜெ. அன்பழகன். கடின உழைப்பாளி. எதற்கும் அஞ்சாத கேள்விகளை எழுப்புவதுடன், நியாயத்தின் பக்கம் நிற்பவர். ஏழை எளியோருக்குத் தேவைப்படும் உதவிகளை எப்போது செய்யும் அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில், "ஜெ. அன்பழகனின் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அற்புதமான மனிதர். கட்சி, தொண்டர்கள் மத்தியில் பலமாக விளங்கிய இவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் முக்கியப் புள்ளியாக வலம்வந்த ஜெ. அன்பழகன் திரைப்படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரைத் துறையிலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்த ஆதிபகவன் என்ற படத்தை இவர் தயாரித்துள்ளார்.