நடிகராகும் கனவோடு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்கள் ஏராளம். அவர்களில் எத்தனை பேர் தமிழ் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறியே? அந்த வரிசையில் எப்படியாவது நடிகராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிப் படிப்பைக் கைவிட்டுவிட்டு சென்னைக்கு ஓடிவந்தவர் சூரி.
'மறுமலர்ச்சி' படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார். இதனையடுத்து ஏகப்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், விஷ்ணு விஷால் நடித்த, 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
புரோட்டா சூரி பெயர் எப்படி வந்தது?
அந்தப் படம் அவரது கரியரில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில், உணவகம் ஒன்றில் 50 புரோட்டா சாப்பிட்டால், 100 ரூபாய் வழங்கப்படும் என்றும், சாப்பிட்ட புரோட்டாவுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை எனவும் போட்டி வைக்கப்பட்டிருக்கும். அப்போது, கடையில் பணியாற்றுபவர் விடுத்த சவால் நிறைந்த போட்டியில் பங்கேற்ற சூரி 50 புரோட்டா சாப்பிட்டு முடிப்பார்.
ஆனால் கடை ஊழியர் சூரியை ஏமாற்ற முயற்சி செய்வார். அப்போது சூரி, ”இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க... நான் மொதல்ல இருந்து சாப்பிடுறேன்” என்று சொல்லுவார். இவரது இந்தக் காமெடி சூரியை திரையுலகிற்குப் புடமிட்டுக் காட்டியது. இதையடுத்து சூரியின் வளர்ச்சி படுவேகமாக வளர்ந்தது.
அதிலிருந்துதான் அவரது பெயர், 'புரோட்டா சூரி' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
கிராமப் பின்னணி கதைகளில்
இதனையடுத்து சூரி கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக சூரியை நடிக்கவைக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டிப் போட்டனர். இவரது பேச்சில் இயல்பாகவே மதுரை வாசம் வீசுவதால் கிராம பின்னணி உள்ள கதைகளில் எளிதாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.