இந்த ஆண்டு பொங்கலன்று அஜித் நடிப்பில் 'விஸ்வாசம்' படம், ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தோடு போட்டியிட்டு வெளியானது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஒரேநாளில் வெளியானலும் ரசிகர்கள் அதை ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடினர். இவ்விரு படங்களும் வசூலிலும் சாதனை படைத்தது.
இதில் 'விஸ்வாசம்' படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சத்ய ஜோதியிடமிருந்து வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இது குறித்து பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கிய நிறுவனம் வசூல் என்று கூறி ரூ 80 கோடியைத்தான் தந்தது. அதற்கு தயாரிப்பாளர், "நீங்கள் ரூ.125 கோடி வசூலானதாக சொன்னீர்களே என்று கேட்டபோது... அது சும்மா ரசிகர்களுக்காக சொன்னது. உண்மையான வசூல் இவ்வளவுதான் என்று படத்தை வெளியிட்ட நிறுவனம் கூறியது" எனக் கூறினார்.
இவரின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியிலும் கோலிவுட் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில், "பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளிவரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. Happy Diwali folks!" என்று தனது கருத்து பதிவிட்டுள்ளது.