'ஜா நாம் ஜோ' எனும் தென் கொரிய திரைக்கதை ஆசிரியரால் எழுதப்பட்ட நாவல் 'Kim Ji-young, Born 1982'. 2016ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் சீனா, ஜப்பான், தாய்வான் ஆகிய தென்கொரியாவின் அண்டை நாடுகளில் சக்கைப்போடு போட்டது.
சுமார் 10 லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்த்தது என கொரிய பதிப்பகம் மினும்சா தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது இதன் பதிப்புரிமை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட 17 நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், எவ்ஹா பெண்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர், 'ஜேமி ஜேங்'. இதுகுறித்து அவர், 'இந்த நாவலை மொழி பெயர்த்தது உணர்வுப்பூர்வமாகவே சவாலான விஷயமாக இருந்தது. இதனை மொழி பெயர்த்ததற்காக சர்வதேச அளவில் ஆணாதிக்கவாதிகளின் வெறுப்பை சம்பாதித்தேன். இந்த நாவல் கொரிய கலாசாரம் சார்ந்தது. இதை வெளிநாட்டு வாசகர்கள் படித்து என்ன செய்யப் போகிறார்கள் என என்னைச் சுற்றியிருந்தவர்களே கேட்டார்கள். ஆனால், இதை மேற்கத்திய கலாசாரத்தோடும் தொடர்புப்படுத்தி பார்க்கமுடியும்' என்கிறார்.
பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்த இந்த நாவலை இயக்குநர் கிம் டூ யெங் படமாக்கியிருக்கிறார். இதில் ஜங் யு மி, கோங் யோ ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தென் கொரியா எந்த அளவு ஆணாதிக்க மனநிலையுடன் இயங்கும் சமூகம் என்பதை, இந்தத் திரைப்படத்தின் வாயிலாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
Kim Ji-young, Born 1982 movie scene வர்த்தக ஆணையத் தேர்தலில் வேட்பாளராக நிற்க வந்த 'ஜோ சங்-ஊக்' எனும் பெண்ணிடம் 'ஜியாங் கப்-யூன்' எனும் சட்டவல்லுநர், 'நீ இன்னும் தனியாகத்தானே இருக்கிறாய். பிறப்பு வீதம் குறைவாக இருப்பதே நம் நாட்டின் பெரிய பிரச்னை. உனக்கென்று தனியாகத் தொழில் இருக்கலாம். ஆனால், நீ உன் நாட்டுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்' என விமர்சித்தார். இதுதான் தென் கொரியாவின் ஆணாதிக்க முகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டான சம்பவம்.
’Kim Ji-young, Born 1982’ படத்தில் பணியாற்றியவர்களை சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். Kim Ji-young எனும் 30 வயதைத் தாண்டிய பெண்மணி, தன் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் சந்திக்கும் ஒடுக்கு முறை பற்றி விவரிக்கும் இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Christoper_Nolan: வில்லாதி வில்லன்களை தந்த திரையுலக மேதை!