தமிழ் சினிமா என்பது ஒரு காலகட்டத்தில் கிராமம் சார்ந்த கதையாடல்களை சுமந்து திருந்திருந்து கொண்டிருந்தது. அப்போது அது, நிலவுடமையாளர்களின் கதையாகவும், ஆதிக்கச் சமூகத்தின் குரலாகவுமே இருந்துவந்தது. தமிழ் திரையுலகம் தமிழ் புனைவெழுத்தாளர்களின் எழுத்துக்களை என்றுமே தனது கடைக்கண்ணால் கூட பார்க்க மறுத்தது.
அப்படியிருக்க, மறைந்த கி.ராஜநாரயணன் அவர்களின் நாவலும் தமிழில் திரைப்படமாக்கியுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு அம்ஷன் குமார் இயக்கத்தில் வெளியான ஒருத்தி திரைப்படம், கிராவின் 'கிடை' நாவலை அடிப்படையாக வைத்து உருவானது தான்.
இந்தியாவில் பிரிடிஷ் ஆட்சிக்கு பிறகான வாழ்வினை தனது பல கதைகளில் சொல்லி வந்த கிராவின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒருத்தி திரைப்படமும் 1884 காலகட்டத்தையே கதைக்களமாகக் கொண்டிருக்கும். இத்திரைப்படம் இந்தியன் பனோராமா உள்பட 13 சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. இத்திரைப்படம் 2004ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது.
செவனி என்ற பெண்ணின் ஏகாபத்திய எதிர்ப்பும்; சாதிய சமூகதத்தில் அவளின் மீறலுமே 'ஒருத்தி'. அந்தப் படமானது, இன்றும் நாம் கவனிக்கத்தவறிய வழக்காறுகளையும், நிலத்தையும் உள்ளடக்கியது என்றே கூற வேண்டும். கி.ரா எழுத்தில் உருவான ஒரே திரைப்படம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.