கோப்பையை கைப்பற்றிய 'கென்னடி கிளப்' டீம்! - suseendran
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'கென்னடி கிளப்' படத்தில் நடித்த கபடி வீராங்கனைகள் நிஜத்திலும் கோப்பையை வென்றுள்ளனர்.
பாரதிராஜா, சசிகுமார், சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இதில் சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். `பாண்டியநாடு', `பாயும் புலி', `மாவீரன் கிட்டு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இமான், சுசீந்திரனுடன் இணைந்து இசையமைக்கவுள்ளார். இந்தியா முழுக்க கபடிக்கு புகழ்பெற்ற இடங்களுக்குப் பயணித்து எடுத்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சில நாட்களுக்கு முன் இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்திற்கும் நிஜ பெண்கள் கபடி குழுவைச் சேர்ந்த வீரர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு பக்கம் ஷூட்டிங் நடக்க, மறுபக்கம் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் அந்த டீம் கோப்பையை வென்று வந்திருக்கிறது . ஆண்டுதோறும் நடக்கும் இந்தப் போட்டியில் கொடுக்கப்படும் கோப்பையின் மதிப்பு ரூ.12 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் சீன மொழியில் டப்பிங் உரிமத்திற்கு இரண்டு கோடி ரூபாய்க்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது. சர்வதேச அளவில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இறுதி கட்டத்திற்கு நகர்ந்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.