தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம் - 'கென்னடி கிளப்' சுசீந்திரன் - சசிகுமார்

சென்னை: 'கென்னடி கிளப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்த பிரபலங்களின் சிறு தொகுப்பை இதில் காண்போம்.

kennedy club

By

Published : Jul 27, 2019, 10:34 PM IST

'கென்னடி கிளப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் அகத்தியன், எழில்,லெனின்பாரதி, சுசீந்திரன், பாரதி ராஜா, சசிகுமார், பாடலாசிரியர் விவேகா, இசையமைப்பாளர் டி.இமான், நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்

கென்னடி கிளப் இசை வெளியீட்டு விழா

பாடலாசிரியர் விவேகா பேசுகையில்,

'வெண்ணிலா கபடி குழு' படத்திலிருந்து தொடர்ந்து கபடி விளையாட்டை முன்னிறுத்தும் படமாகவும் வறுமை பூசிய எளிய மனிதர்களின் வாழ்வு, பெண்களின் முன்னேற்றம் போன்ற வலிமையான கருத்துகளை கூறும் படமாக இது இருக்கும். இமான் மிகச் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர்களின் ஜாம்பவான் பாரதிராஜா இப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பலம் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில்,

என் அப்பாவிற்கு கபடி விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் வெண்ணிலா கபடி குழு எடுத்தேன். என் அப்பாவாக இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்துவிடுவேன். அதை ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் சசிகுமார் பேசுகையில்,

'கென்னடி கிளப்' படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள்தான். கபடி பயிற்சியாளர் செல்வமாகதான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா நடித்திருக்கிறார். இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் சிகரத்துடன் சுசீந்திரன்

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,

நல்ல கலைஞர்களை, வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த பெண்களுக்கு நன்றி கூற வேண்டும். இது சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை.

சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போதுதான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது. இப்படத்தை தொழிற்சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன் என்றார்.

கென்னடி கிளப் குழுவினர்

நாயகி மீனாட்சி பேசுகையில்,

இயக்குநர் சுசீந்திரனிடம் இருந்து கடின உழைப்பு போன்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். தேர்வு இல்லாமல்தான் என்னை தேர்ந்தெடுத்தார். அதுபற்றி அவரிடம் கேட்கும்போது ’உன் மேல் நம்பிக்கை வைத்துதான் உன்னைத் தேர்வு செய்தேன். என கூறினார். சசிகுமார் மிக நல்ல பயிற்சியாளர் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பதக்கங்களை வழங்கினார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details