சென்னை: கீரித்தி சுரேஷ் பிரதான கேரக்டரில் நடித்துள்ள 'பென்குயின்' படத்தின் டீஸரை இந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகிகளான சமந்தா, டாப்ஸி, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்..
இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.
வசனம் ஏதும் இல்லாமல் பரபரப்பான திரில்லர் காட்சிகளுடன், ஒரு தாயின் கதை என்ற கேப்ஷனுடன் அமைந்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெயலர் ஜூன் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த உளவியல் திரில்லர் படம் தனது குழந்தையை காப்பாற்றும் கர்ப்பிணி தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும்.
இந்தப் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் படத்துக்குப் பிறகு, ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் படமாக பென்குயின் அமைந்துள்ளது.
இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.
இதையடுத்து படத்தின் தமிழ் டீஸரை நடிகை திரிஷா, தெலுங்கு டீஸரை நடிகை சமந்தா, மலையாள டீஸரை மஞ்சு வாரியார், ஹிந்தி டீஸரை நடிகை டாப்சி ஆகியோர் பகல் 12 மணிக்கு ஒரே நேரத்தில் இணையதளத்தில் வெளியிட்டனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த இருமாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. தற்போது வரை திரையரங்குகள் திறக்காமல் இருக்கப்படும் நிலையில், ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருக்காமல் நேரடியாக ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
படத்தில் குழந்தையின் தாய் என்ற கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங்களுடன் மலையாளத்திலும் படம் வெளியாகிறது.