ஹைதராபாத்: சிறந்த நடிகையாக தேசிய விருது கிடைத்த பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் படத்துக்கு ’மிஸ் இந்தியா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு வெளியான மகாநடி என்ற படத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் கேரக்டரில் நம் கண்முன்னே தோன்றி பாராட்டை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இந்தப் படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலிவுட் படம் ஒன்றில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதற்காக உடல் எடையையும் குறைத்தார் கீர்த்தி.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய படத்தின் டைட்டிலுடன், டீஸரையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்துக்கு ’மிஸ் இந்தியா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நதியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படத்துக்கு இசை - தமன். இயக்கம் - நரேந்திர நாத். தயாரிப்பு - ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்ஷன் நிறுவனம். தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படம் தயாராகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.