தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்குப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இயக்குநர் சங்கத்தின் 101ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி 1 தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச்செயலாளர், 4 இணைச் செயலாளர்கள், 1 பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள் என்ற நிர்வாகக் குழுவுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் வைப்புத்தொகையாக 3,000 ரூபாயும், நன்கொடையாக 10,000 ரூபாயும் தர வேண்டும்.
துணைத் தலைவர், இணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகையாக 2,000 ரூபாயையும், நன்கொடையாக 3,000 ரூபாயையும் சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகையாக 2,000 ரூபாயையும், நன்கொடையாக 2,000 ரூபாயையும் அளிக்க வேண்டும்.
தேர்தல் முடிவில் பதிவான மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கையாவது பெறும் உறுப்பினர்களுக்கு மட்டுமே வைப்புத் தொகைத் திருப்பித் தரப்படும். இந்தத் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் சங்க அலுவலகத்தில் வழங்கப்பட்டது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாகச் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 10) விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும் என்றும், நாளை விண்ணப்பங்களைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியிடப்பட்டு தேர்தல் வரும் 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட இயக்குநர் கே. பாக்யராஜ் விருப்ப மனு அளித்துள்ளார். தற்போது தலைவராக உள்ள ஆர்.கே. செல்வமணியை எதிர்த்து இவர் போட்டியிடவுள்ளார்.
இதையும் படிங்க:Exclusive: நடிகராக பிடிக்கும்; ஆனால் இது சரியல்ல - சாய்னா நேவால்