நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக களமிறங்கி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மநீம கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர். மேலும் பலர் விலகுவதாகத் தகவல் வெளியாகியது.
உடனே கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தை விட்டு மகேந்திரனைத் தவிர வேறு யாரும் வெளியேறவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது அவரே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவரைத் தொடர்ந்து மநீம சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகியுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது சூறாவளி பரப்புரையை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, தற்போது சூறாவளி காற்றாக வீசிய உட்கட்சிப் பூசலால் முக்கிய நிர்வாகிகளை இழந்துவருகிறது.