தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் ஒத்த கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து அதனை அன்றைய விவாதப்பொருளாக மாற்றி வருகின்றனர்.
கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி ஏற்கனவே அரசியல் களத்தில் குதித்துவிட்டார். ஆனால் அவருக்கு முன்பே அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன் என்று சொல்லி வந்த ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை.
2021இல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ரஜினி கட்சி தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள போதிலும் சமீபகாலமாக ரஜினி அரசியல் ரீதியாக பல்வேறு அதிரடி கருத்துகளைக் கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார், 2021இல் அதிசயம் நிகழும், தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது, தன் மீது அரசியல் சாயம் பூசப்பார்க்கிறார்கள் உள்ளிட்ட அவரது சமீபத்திய கருத்துக்கள் பேசுபொருளாக மாறி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
2021ல் அதிசயம் நிகழும் - ஆருடம் சொன்ன ரஜினிகாந்த்!
அதோடு மட்டுமல்லாமல் ரஜினியுடன் கமல் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் அடிபடுகிறது. இருவரும் இணைந்து செயல்பட போவதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒத்திசைந்து நடப்பது போலவே கமலும் கருத்து தெரிவித்திருக்கிறார். நாங்கள் இணைவது முக்கியமல்ல; மக்களின் வளர்ச்சிதான் முக்கியம் என்று தெரிவித்ததே இதற்கு சான்றாக உள்ளது.