‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். அதன் பிறகு ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘சிவப்பதிகாரம்’, ‘மந்திரப்புன்னகை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ‘மந்திரப்புன்னகை’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்திருந்தார். இதனிடையே ‘கள்ளன்’ என்ற படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அந்தப் படம் தற்போது வெளியாகவுள்ளது.
கரு.பழனியப்பனின் 'கள்ளன்' ரிலீஸ் எப்போது..? - சந்திரா
பணமதிப்பிழப்பால் முடங்கியிருந்த இயக்குநர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் 'கள்ளன்' எனும் புதிய படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. அரசாங்கம் வேட்டையாட தடைவிதித்த பின்னர் திருட நினைக்கும் ஒரு வேட்டைக்காரன் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் கதை. கரு.பழனியப்பன் வேட்டைக்காரனாக நடிக்கிறார். 1975ஆம் ஆண்டு காலகட்டத்தையும், 1988 - 1989ஆம் ஆண்டு காலக்கட்டத்தையும் படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தால் முடங்கிப்போனது. தற்போது திரைக்கு வர தயாராகியுள்ளது.