’ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரேஷ்மிகா மந்தானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றுவருகிறது. செப்டம்பர் 24ஆம் தேதி இதன் படப்பிடிப்பு மலைக்கோட்டையில் நடைபெற்றது, அப்போது அங்கு வந்த இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர், ‘சுல்தான்’ என்ற தலைப்பு குறித்து கேள்வியெழுப்பி பிரச்னை செய்தனர். இதனையொட்டி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்து அமைப்புகளின் இந்த செயலுக்கு ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்ரீம் வாரியர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திப்பு சுல்தான் வரலாற்று அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என்றும் கூறி இரு அமைப்பினர் 24.09.2019 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கைக் குழு உள்ளது.
இதுதவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.
ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.