கார்த்தி-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம் 'தம்பி'. இந்தப்படத்தில் ஜோதிகா, சத்யராஜ், சௌகார் ஜானகி, நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'தம்பி' திரைப்படத்தில் நடித்தது, அதில் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபங்கள் குறித்து நடிகர் கார்த்தி ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய கார்த்தி, 'இந்தப் படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி (ஜோதிகா) நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை படக்குழு அணுகியது.
இருவரும் பணியாற்ற வேண்டுமென்பதால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா? என்று யோசித்து தான் முடிவெடுத்தோம். மேலும், ஜீத்து ஜோசப் இயக்கம் என்றதும் இன்னும் சிறப்பு கூடியது. அவருடைய 'த்ரிஷ்யம்' படம் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும். அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியுடன் உறுதியாக இருக்கும். இப்படம் குடும்பக் கதையை மையப்படுத்தியது என்பதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
'பையா' படம் வித்தியாசமான காதல் கதை. படம் முழுவதும் இரண்டே பேர் தான். அதிலும், காரில் தான் பயணம். இதுபோன்ற வித்தியாசமான கதை மற்றும் நடிப்பிற்கு வாய்ப்பும் இருந்தது என்பதால் தான் தம்பி படத்தில் நடித்தேன்.
எனது அண்ணியை படப்பிடிப்பில் பார்க்கும்போது வீட்டில் எப்படியோ அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், அவர் படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்கு தான் நேரடியாக பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு அணிய வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும் என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார். அவருடைய கலாசாரம் எனக்குப் பிடித்திருந்தது.
மேலும், இப்படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது.