தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் திரைப்படங்களின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கள் சிலரே. அந்த வரிசையில் கார்த்தியின் அறிமுகப் படம் 'பருத்திவீரன்'. இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததுடன் தரமான சினிமா, அரிதான வாழ்வியல் படைப்பு என ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. கடந்த பிப்ரவரி 23, 2007ஆம் ஆண்டில் 'பருத்திவீரன்' திரைப்படம் வெளியானது. இன்றுடன் அந்த திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இயக்குநர் அமீரின் மாஸ்டர் பீஸ் திரைப்படமே 'பருத்திவீரன்'. மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவன் பருத்திவீரன். பெற்றோரை இழந்து சித்தப்பாவிடம் சேர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு திரிகிறான்.
தன் அத்தை மகளின் அப்பழுக்கற்ற காதலால் மதிக்கத்தக்க மனிதனாகக் கனிவதும், இறுதியில் சாதிய மேட்டிமை உணர்வால் காதலர்களுக்கு என்ன ஆகிறது என்பதும்தான் 'பருத்திவீரன்' படத்தின் ஒன்லைன். அறிமுகமாவதற்கு முன்னர் மூத்த நடிகர் சிவகுமாரின் மகன், அப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்ட நடிகர் சூர்யாவின் தம்பி என்ற பார்வையே கார்த்தி குறித்து இருந்தது.