கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், கன்னட சின்னத்திரை நடிகை அனிகாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்களை கைப்பற்றினர். தொடந்து நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப் பிரபலங்களை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்க தொடங்கி உள்ளனர். தற்போது சஞ்சனா கால்ரானி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் டோப் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவரையும் சிசிபி அலுவலர்கள் கே.சி பொது மருத்துவமனைக்கு மாதிரிகளை சேகரிக்க அழைத்துச் சென்றனர்.