நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து கருத்துத் தெரிவித்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மும்பை நகரத்தையும், மகாராஷ்டிரா மாநிலத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். மும்பை குட்டி பாகிஸ்தான் என்று கூறிய கங்கனா ரணாவத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்; இல்லையென்றால் அவர் மும்பை நகரத்திற்கு வரக்கூடாது எனவும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இதனால், கங்கனா ரணாவத்திற்கும் சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத்துக்கும் ட்விட்டரில் சண்டை மூண்டது. இதனைத்தொடர்ந்து கங்கனா ரணாவத்திற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர்கள், மும்பை நகரத்தை விமர்சித்த நபருக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளிக்கிறது என்றனர்.
இந்த வாக்குவாதம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மும்பை பந்த்ரா பகுதியில் பலி ஹில் இடத்தில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டை ஆய்வு செய்த குழுவினர், விதிகளை மீறி ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியுள்ளதாக நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தனர். இந்நிலையில், மும்பை மாநகராட்சி ஊழியர்கள் வீட்டின் ஒரு பகுதியை அலுவலர்கள் முன்பு இடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகை கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகின்ற 22ஆம் தேதிக்கு மாற்றியது.