'மதராசப்பட்டினம்', 'சைவம்', 'தேவி' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஏஎல் விஜய்யின் இயக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படத்தில், முன்னதாக ஜெயலலிதா கதாப்பாத்திரத்திற்கு கங்கனா ரனாவத் தேர்வுசெய்யப்பட்டு படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கங்கனா ரனாவத் 'தலைவி' படத்திற்காக பரத நாட்டியம் கற்கும் புகைப்படம் அவரது குழுவினரால் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திரைத்துறையில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்ததோடு மட்டுமன்றி, சிறுவயது முதற்கொண்டு பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கியவர் என்பதால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தில் நடிப்பதற்காக, கங்கனா முறையாக பரத நாட்டியம் கற்றுப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.