மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் எம்ஜிஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையை அதிகரித்திருந்தார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. தணிக்கை குழுவும் 'தலைவி' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.
எப்போது வெளியாகும் தலைவி?
இந்தப் படத்தின் ட்ரெய்லர் கங்கனாவின் பிறந்த நாளான மார்ச் 23ஆம் தேதி வெளியானது. முன்னதாக இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கரோனா பரவல் காரணமாக வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளப்பக்கத்தில் 'தலைவி' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என செய்திகள் பரவின. இந்தச் செய்திக்கு தற்போது கங்கனா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில், " 'தலைவி' படம் வெளியாகும் தேதி குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
புரளிகள் பரப்புவதை நிறுத்துங்கள். நாடு முழுவதும் எப்போது திரையரங்குகள் திறக்கப்படுகிறதோ அப்போது படத்தை வெளியிடுவோம்" நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க: 'தலைவி' ட்ரெய்லர் வெளியீட்டு விழா: மாஸாக வந்த கங்கனா