மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இதில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையைக் கூட்டினார்.
'தலைவி'க்கு குட் பை சொன்ன கங்கனா...! - தலைவி படப்பிடிப்பு நிறைவு
கங்கனா நடிப்பில் உருவாகி வரும் 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தின் அப்டேட்களை கங்கனா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். சமீபத்தில் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படத்தையும் படப்பிடிப்பின் புகைப்படத்தையும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்று (டிசம்பர் 12) இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்று நாங்கள் வெற்றிகரமாக தலைவி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இந்தப் பாத்திரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். இப்போது திடீரென இந்த கதாபாத்திரத்திலிருந்து விடைபெறும் நேரம் வந்துள்ளது. இது எனக்கு ஒரு கலவையான உணர்வை தருகிறது என பதிவிட்டுள்ளார்.